headlines

img

புத்தக மேசை : சோவியத்தை நினைவில் நிறுத்தி மார்க்சியத்தை மேம்படுத்தும் நூல்

நான் 2014 - ல் சிவகாசிக்கு குடியேறுவதற்கு முன்பே தோழர் என்.கே.(என்.கிருஷ்ணசாமி) அவர்களை அறிவேன்.  ஏராளமான இளம் கம்யூனிஸ்டுகளின் ஆசிரியராக அவரை நான் பார்க்கிறேன்.  ஆசிரியர் அரங்கிலும் தமுஎகசவின் சகல நிகழ்வுகளிலும் தன்னை மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இணைத்துக்கொண்டு வயோதிகத்தின் சாயல் சிறிதும் இல்லாமல்இளைஞர்களோடு தானும் ஒரு இளைஞராக அவர்  பணியாற்றுவதைக் கண்டிருக்கிறேன். ஒவ்வொரு ஆகஸ்ட் 15லும் சிவகாசி -சாட்சியாபுரம் புத்தக விற்பனை இயக்கத்தில்அவர் நின்று பணியாற்றுவதை நீண்ட உரையாற்றி, தோழர்கள் அறியாத பல சேதிகளைச்சொல்வதையும் பார்த்திருக்கிறேன்.  அவருடைய உரைகளைக் கேட்டபோதுதான் நீங்கள் எழுதலாமே என்கிற வேண்டுகோளைப் பலரையும் போல நானும் வைத்தேன். இன்று இந்தப் புத்தகத்தின் வாயிலாக அவர் நம்மோடு ‘பேச’த் துவங்கியிருக்கிறார்.

சோவியத் பூமியைப்பற்றி விதவிதமான ராகங்களில் அவர் இசைக்கும் கீதங்களின் தொகுப்பாகவே இந்நூல் அமைந்திருக்கிறது. சொல்லிச் சொல்லி மாளவில்லை.  சோவியத் பற்றியும் லெனின்பற்றியும் எழுதி தீர்க்க முடியுமா என்ன?
அதிலும் தோழர் என்.கே.கே. போன்ற மூத்த தோழர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை சோவியத் போல ஒருபொதுவுடைமைப் பூங்காவை இந்தியாவில் சமைத்து விடும் பெருங்கனவோடு கழித்தவர்கள் அல்லவா!
உலகம் முழுவதும் இலவசமாகக் கப்பல் கப்பலாகப் புத்தகங்களை அச்சிட்டுக் கொடுத்தே நொடித்துப்போன தேசம் அதுஎன்று தன்னுடைய “அதீதங்களின் நூற்றாண்டு” என்னும் நூலில் மார்க்சிய அறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம் குறிப்பிடுவார்.  இளம் வயதில் கோவில்பட்டியில் 10 கோவில்பட்டியில் 10 பைசாவுக்கு நான் வாங்கி வாசித்த  லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’ நூலை லெனின் எழுதிய பின்னணியை இந்நூலில் தோழர் என்.கே.  விளக்கியிருக்கிறார்.  பகத்சிங் தூக்கு மேடைக்குப் போவதற்கு முன்னால் வாசித்தநூல் அது என்று இங்கே கொண்டுவந்து இணைத்துக் கட்டுரையை முடிக்கிறார்.  தகவல்களையும் கதைகளையும் உள்ளூர்வரலாற்றுக் குறிப்புகளோடு இணைப்பதுதான் இக்கட்டுரைகளின் சிறப்பு. 1857 சிப்பாய்களின் புரட்சி பற்றி துவங்கும் கட்டுரை தஞ்சை மண்ணில் தோழர் சீனிவாசராவ் உழைக்கும் மக்கள் கட்டியகோவிலில் பரிவட்டம் கட்ட ஒப்புக்கொண்ட மனநிலையை விவரிப்பது ஓடு முடிவது இன்னொரு உதாரணம்.

தோழர் நன்மாறன் சோவியத் யூனியன் சென்றதைப் பற்றி குறிப்பிடும் போது அங்கே அவர் தோழர் சீனிவாசராவின் பேத்தியைச் சந்தித்ததைப் பற்றி எழுதிய வரிகளைப் படித்ததும் ஒரு கணம் உடல் சிலிர்த்தது ..எந்த மண்ணில் யாரோடு என்னஒரு சந்திப்பு!  இதுபோன்ற சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை இந்தக் கட்டுரைகள் தொடர்ந்து தருகின்றன .தோழர் லெனின் வாசித்த இந்திய நூல்கள் பற்றி அரிய செய்திகளை எழுதியவேகத்திலேயே தோழர்கள் லெனின் - குருப்ஸ்கயா காதல் மணம் பற்றியும் எழுதுகிறார்.

லெனின் மறைவுக்குப் பிறகு தோழர் ஸ்டாலின் காலம்,  இரண்டாம் உலகப் போர்மூண்ட காலம், ஹிட்லரின் நாஜிப் படைகளின் அழித்தொழிப்புப் பயணத்தைக் குறுக்கே விழுந்து தடுத்து நிறுத்திய  2 கோடிசோவியத் மக்களின் தியாகத்தை வரலாறு பதிவு செய்துள்ளது.  ஆனால் தோழர் என்.கே. இந்த நூலில் வீரத்தாய்ஸ்தெப்பனோவா தனது 9 மகன்களையும் போர்முனைக்கு அனுப்பி ஒவ்வொருவராக சாகக்கொடுத்த கதையையும் வீரப் பெண்மணி தான்யா  ஜெர்மனிப் படைகளால் கொல்லப்பட்ட கதையையும் சொல்லி அந்த இரண்டு கோடிப் பேரின் தியாகத்தின் சில துளிகளை நம் மீது தெளித்து நம்மைக் கண்கலங்கச் செய்கிறார்.

சோவியத் யூனியனுக்குச் சென்று திரும்பிய தந்தை பெரியார், என்.எஸ்.கிருஷ்ணன்,  ராகுல்ஜி போன்றவர்கள்  வெளிப்படுத்திய ஆச்சரியத்தையும் அனுபவத்தையும் அவர்களின் சொந்த  வார்த்தைகளிலேயே அந்த உணர்ச்சி குன்றாமல் நமக்குக் கடத்துகிறார் தோழர் என்.கே.சோவியத் பற்றிய நூலாக மட்டும் இதை அவர் வடிவமைக்கவில்லை.  மார்க்சியம்பற்றிய புரிதலை இளம் தோழர்களுக்கு உண்டாக்கும் நோக்குடன் பல கட்டுரைகளை இந்நூலில் இணைத்துள்ளார்.  விடுதலை பெற்ற இந்தியாவில் கனரகத்தொழில் துவங்க அமெரிக்காவையும் பிற முதலாளித்துவ நாடுகளையும் மட்டுமே நாடித்தோற்றற  நேருவிடம் தோழர் ஏ. கே.  கோபாலன் , “இதுவரை உங்கள் பார்வையை வலது பக்கம் மட்டுமே திருப்பிக் கொண்டிருந்ததால் தோற்றீர்கள். இடது பக்கமும் உங்கள் பார்வையைத் திருப்பங்கள்”  என்று பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்ட பிறகே,  நேரு சோவியத் யூனியனுக்கு சென்று உதவி கேட்டார் . அதன் பலனாகத்தான் நமக்கு சோவியத் உதவியுடன் பிலாய், ரூர்கேலாவகல்  இரும்புத் தொழிற்சாலைகள் உருவாகின என்பகிற  வரலாற்றுச் செய்தியை தோழரே என்.கே. பகிர்ந்து கொள்ளும்போது நமக்குப் பெருமித உணர்வு ஏற்படுகிறது.

மார்க்சியம் தோற்றுவிட்டது என்றுஒவ்வொரு காலகட்டத்திலும் முதலாளித்துவ சிந்தனையாளர்கள் பஜனை பாடிக்கொண்டேதான் இருப்பார்கள்.  இன்றையபின்னடைவுகளிலிருந்தும் இடதுசாரிகளின் மீண்டெழுவார்கள் புதிய சமுதாயம் படைப்பார்கள் என்கிற நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்கிற உன்னத நோக்கத்துடன் இந்த வயதிலும் விடாப்பிடியாக உறுதியுடன் நிற்கும் தோழர்என். கே .யின் மனநிலை நமக்கெல்லாம் வழிகாட்டுகிறது. ரெட்சல்யூட் காம்ரேட் என்.கே.'

 ஒரு வரலாற்று அதிசயம்,
ஆசிரியர்:
என்.கிருஷ்ணசாமி,
வெளியீடு: கிருஷ்ண சுந்தரம் பதிப்பகம், 1/6/334,  சிவானந்தம் நகர், சிவகாசி,விருதுநகர் மாவட்டம்
பக். 250 விலை ரூ.250/-
செல்பேசி :
9443319910

===ச.தமிழ்ச்செல்வன்===
;